ஊதுவது நின்றுவிட்டால்

அண்ணா, இப்போது தான் “மலையில் இருந்து இறங்கி கொண்டு இருக்கிறோம்" என்றாள் இந்திரா. ம்..சரி பொறுமையா வாங்க நான் காத்திருக்கேன் என்று சொல்லயவாரு இணைப்பைத் துண்டித்து, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிதிற்கு நடையை கட்டினான் கௌதம். பெண்கள் கம்மியாக இருப்பதைக் காண முடிந்தது. மாலை நேரம், கல்லூரிகள் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அர்ப்ப புத்தி நெஞ்சில் உதித்தது அவனுக்கு. சாலையை கடக்கையில் எப்போதும் இருக்கும் நடமாடும் ஏடிஎம் இயந்திர வண்டி இல்லை,  200 ரூபாய்க்காக நடு வீதியில் நின்று விளம்பர காகிதங்கள் கொடுக்கும் கல்லூரி மாணவர்கள் காணவில்லை. கிட்டத்தட்ட அவர்கள் வர 1 மணி நேரம் ஆகும், என்ன செய்ய, என்று சிந்தித்து காந்திபுரம் புது பேருந்து நிலையம் அடைந்தான் அவன். நின்றது ஈரோடு தனியார் பேருந்து, SCP. எப்போது எடுப்பீங்க என்று 
அவன் கேட்க,
நடத்துனர் தண்ணீர் குடித்தப்படி 
1 என்று விரல் செய்கை செய்தார். மகிழ்ச்சி, 20 ரூபாய் மிச்சம், காரல் மார்க்சின் படத்தை தொலைபேசியின் முன் பகுதியில் பார்த்து ஒரு வெட்க பார்வை. சுத்தி பார்த்தான். அந்த பேருந்து நிலையத்திலிருக்கும் 
ஒவ்வொரு தூணிற்கு அடியிலும்  காதல் புறாக்களின் கூட்டம். கல்யாணம் வரை முடிய வேண்டும் என வாழ்த்தினான்.

மீண்டும் என்ன செய்ய, என அறியாமல் உட்கார இடம் தேட,
ஏமாற்றமே மிச்சம். அது வேறு இல்லாமல் திருநங்கைகள் வந்தால் கொடுக்க பணம் இருக்கிறதா என்று பார்க்க, 2 ரூபாய், 1 ரூபாய் காசும் மீதி 2 ,200 ரூபாய் தாளும், 1, 100 ரூபாய் தாளும் இருந்தது. 3 ரூபாய் கொடுத்தால் என் மூஞ்சி கிழிந்து விடும், 100 ரூபாய் கொடுத்தால் மீதி வருமா..என்ற 
அற்ப அச்சம் வேறு. எனவே நடையை மாற்றி காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள
பெட்ரோல் பங்க் பக்கத்தில் நின்றான். கையில் தொலைப்பேசி எடுத்து , இந்திராவிடம் “நான் பெட்ரோல் பங்க் பக்கத்தில் நிற்கிறேன் , பேருந்தில் இருந்து இறங்கிய உடன் தொடர்பு கொள்" என்றான். அவளும் அவளது தந்தையும் கோவைக்கு புதுது. சென்னை நீதிமன்றத்தில் மூன்றாம் நிலை பணியிடங்கள் நிறப்பும் தேர்வுக்காக சேலத்தில் இருந்து வந்திருந்தார்கள். தடாகம் சாலை GCT தான் தேர்வு நடக்கும் இடம், அப்படியே தேர்வு முடிந்து மருதமலை சென்று திரும்பினர்கள்.

வந்து நின்றவுடன் பெட்ரோல் விலையைப் பார்த்து மோடியை 
கெட்ட வார்த்தையில் வர்ணித்தான்.  தன் நண்பன் தன்னிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை உனக்கெல்லாம் நல்ல சாவே வராது டா..ஏனோ அந்த நியாபகம். பக்கத்திலே ஒரு சிறுவன் பலூன் விற்று கொண்டு இருந்தான். சிறுவன் என்று சொல்ல முடியாது நடுநிலை வயது தான், 20 இருக்கும். 

மூச்சை விற்று உயிர் வாழ்ந்து
உடல் வளர்த்து பயன்  என்ன
காசுதான் கடவுள் என்ற பின்
கருங்கல்லுக்கு இங்கு வேலை என்ன..

என்று உள்ளே எண்ணிக்கொண்டான். 
சிறிது நேரம் இருக்கும் அவன் தன் மின்னஞ்சலை சரிப்பார்த்து கொண்டிருந்தான்.
ஒரு காரில் வந்தவர் பெட்ரோல் போடச் சொல்லி விட்டு, பலூன் விற்பவரிடம் வந்து எவ்வளவு என்றார் , ஐம்பது என இவன் கூற, அவர் இருபது என கூறினார். அண்ணா இது பெரிய பலூன் ணா, நாப்பதாவது கொடுங்க என இவன் கேட்க, அவர் மறுத்து காரினுள் ஏறிவிட்டார். இவன் அவரைப் பின் தொடர்ந்து காரின் கண்ணாடி முன் வந்து முப்பதஞ்வது கொடுங்க, ரொம்ப பசிக்குது என்று கூற , அவர் தன் சட்டப்பையில் இருந்து ஐந்தை எடுத்து நீட்டினார். இவன் வாங்கி காருக்குள்ளே வீசி விட்டான்.கௌதமிற்கு திடுக்கென்றது. அவர் காரை விட்டு வேக வேகமாக இறங்கி, இவனை அடிக்க வந்தார், நின்று கொண்டிருந்த கௌதமும், பெட்ரோல் போடும் அண்ணனும் அவரை தடுக்க முற்பட்டனர். எனினும்  “பலார் "என்ற அறை 
விழுந்தது. கோபத்தில் கார் காரர் கேட்ட வார்த்தைகளை வீசி எறிந்தார்.கூட்டம் பார்க்க, அனைவரும் இயல்பாய் நகர்ந்தன.

பலூன் விற்றப் பையன் நின்று கொண்டே அழுவதைக் காண முடிந்தது. அவுனுக்கும் கண்ணில் தண்ணீர் நின்றது. பரிதாப கண்ணீர். வெக்கம் கெட்டது. எங்கிருந்து தான் வந்து விடுமோ இழப்பிலும், இல்லாமையிலும் உடன் இருக்கும். நின்று கொண்டிருந்த அவன் அந்த பங்கின் முனையில் சென்று அமர்ந்தான்.
பின்தொடர்ந்து  கௌதம் அவன் பக்கம் அமர்ந்தான். எனக்கு ரெண்டு பலூன் என்று 100 ரூபாயை நீட்டினேன். அழுது கொண்டே தலையை வேண்டாம் என ஆட்டினான். தானும் கண்ணீரைத் தொடைத்து கொண்டான். இல்ல எனக்கு ரெண்டு தம்பி இருக்கான் கொடு என்றான். ஊதுவதை ஆரம்பித்தான். இல்ல ஊத வேண்டாம், அப்படியே கொடு என்றான். கொடுத்து விட்டு, கண்ணீரை துடைத்து, மீதி 30 ரூபாயை நீட்டினான். உடைந்து விட்டான் கௌதம். அவனால் தாங்க முடியவில்லை.இல்ல வேண்டாம் என்றான். அவனால் அழுகையை நிப்பாட்ட முடியவில்லை என்பது தெரிந்தது. கண்ணின் தண்ணீரால் புமுதி படிந்த அவன் முகம் சுத்தம் ஆனது.


என்ன பேச, என்று சிந்திக்க,
அப்பா, அம்மா இல்ல ணா.
யாரு என்ன வளர்த்தனு சொல்ல யாரு இல்லன, ஒரு பலூன் வித்த கடக்காரன் இருபது ரூபா கொடுப்பான் அவ்வளவு தான், என்றான்.
தேம்பி கொண்டிருந்தான்.
கௌதமிடம் இருந்த ஜூஸ் பாட்டிலை கொடுத்தான். பின்பு தான் அறிந்தான் வெக்கம் கெட்ட தற்குறி நான் என்று . அதைப் பார்த்தும் மீண்டும் அழுதான்.
புரிந்து கொண்டு கட்டி அணைத்தான். “ஒரு நாள் வாழ்க்கை மாறும்" என்று அவனிடம் எப்படி சொல்வேன்.

இருபது வயது வரை அவன் வாழ்வில் என்ன மாற்றம் கண்டிருப்பான். உடல் வளர்ந்திருக்கும், உடை விரிந்திருக்கம். வேறு என்ன சாலை முதல் சாக்கடை வரைப் படுத்து பழகி இருப்பான்.
சுகம் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா அவனுக்கு,
மகிழ்ச்சி என்றால் என்ன என்று தெரியுமா அவனுக்கு, என எண்ணங்கள் உள்ளே,
இயலாமையை உணர்ந்தான் கௌதம்.
 
தன்னிடம் இருந்த மூன்று ஆடைகள் எடுத்து நீட்டினான்.
வேண்டாம் என்றான். இல்ல வெச்சிக்கோ என்றான். மடித்து வைத்தான். இரு நூறு ரூபாய் பணத்தை கொடுத்தான். அவன் கை ஆடியதோ இல்லையோ 
கௌதமின் கை ஆடியது.  வாங்க மறுத்தான் , கைப் பிடித்து மடக்கி கொடுத்து பலூனையும் அவனிடம் ஒப்படைத்தான்.
உள்ளே ஏதோ மனச்சோர்வு ,பெறுவதில் மட்டும் தயக்கம் அல்ல, கொடுப்பதிலும் தயக்கம் அறிந்தான். 
அவனது தொலைப்பேசி அடித்தது.

இந்திரா அண்ணா வந்துட்டோம் என்றாள். அவர்களைப் பார்த்து விட்டான் கௌதம். பலூன் தம்பியிடம்
வருகிறேன் என்றான். தலை அசைத்தான்.

மூவரும் வண்டியில் ஏறினார்கள்.
சன்னல் வழியில் அவன் பலூன் ஊதுவதை ஆரம்பித்தைப் பார்த்தான் இவன்.

கடவுள் நாசமாய் போகட்டும் என்று சாபம் விட்டான்.









Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்