கன்னிவத்தான்கோட்டையில் இருந்து புறநகர் செல்லும் பாதையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே தான் உள்ளது அந்த தள்ளுவண்டி கடை. அரசின் புளியமரங்கள் உதவி தர, நல்ல நிழல் படைத்த இடம். மூன்று பக்கம் வழிப்பிரிந்து சாலை ஓடும். பள்ளி, வங்கி, காவல் வளாகம், பூக்கடை என நல்ல கடைகள் நிறைந்த தெருக்களும்,வீடுகளும், அடுக்குமாடியில் வாடகை வாசமும் தூக்கும் பகுதி அது. பச்சை விளக்கு எறிய தொடங்கினால் அடுப்பும் எறிய தொடங்கும். மல்லிகை பூ போல இட்லி என்பார்களே, ஆம் உண்மையில் ஈஸ்ட் மாவில் நாட்டியம் ஆடுவதால் அவ்வாறே இருக்கும். வீட்டில் மூன்று என்போர் இங்கே ஐந்து என்பர், ஐந்து என்போர் பத்து என்பர். பசி ஆற்றா படி உணவு அது. ருசி தேனைத் தோற்கடிக்கும், தோசை நாவிடம் திசை கேட்கும். துணியில் மாவு ஒட்டவே கூடாது என்பதற்க்காக மல்லு துணியை இருபது ரூபாய் தையல் காரரிடம் கொடுத்து சென்ற வாரம் தான் புதிப்பித்தாள் செல்லம்மா. கணவர் மின்சாரம், ஒரு ஆட்டோ ஓட்டுநர், அவர் பிறந்தபோது தான் அவரது ஊருக்கு மின்சாரம் வந்ததாம், எனவே அதுவே பெயர் ஆயிற்று. அவர்களுக்கு ஒரு பையன் கதிர்வேல், ஒரு பெண் தாமரை. கதிர்வேலும், தாமரையும் பள்ளி முடித்து...